உளறல் நாயகனோடு கரம் கோர்ப்பது எலியும், பூனையும் இணைந்து குடித்தனம் நடத்தப் போகிறோம் என்பதற்கு சமம் என ரஜினி கமல் குறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா கடுமையாக விமர்சித்துள்ளது.
முன்னதாக, ஒடிசா பல்கலைக்கழகத்தில், டாக்டர் பட்டம் பெற்று திரும்பிய நடிகர் கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நானும், ரஜினியும் இணைவதில், அதிசயம் எதுவும் இல்லை. 44 ஆண்டுகளாக இணைந்து தான் உள்ளோம்.
அரசியலில் இணையும் அவசியம் வந்தால், கண்டிப்பாக சொல்கிறோம். தற்போது வேலை தான் முக்கியம். இதை பேச வேண்டியதில்லை. தமிழகத்தின் மேம்பாட்டிற்காக, இருவரும் சேர்ந்து பயணிக்க வேண்டியது வந்தால் பயணிப்போம் என்று அவர் கூறினார்.
இதையடுத்த ஒரு 1 மணி நேரத்தில் கோவா செல்வதற்காக, சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திடம், கமல்ஹாசன் கருத்து குறித்து கேள்வி எழுப்பிய போது, "மக்கள் நலனுக்காக, நானும், கமலும் இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், நிச்சயமாக இணைவோம்,'' என்றார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், நிச்சயம் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் என்று கருத்து பரவலாக பேசப்பட்ட நிலையில், மக்கள் நலனுக்கான கமலுடன் கூட்டணி வைப்பேன் என ரஜினி கூறியது தமிழகத்தில் பரபரப்பாக பேச்சப்பட்டு வந்தது.