பழனியில் கந்தசஷ்டி திருவிழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் காப்புகட்டி சஷ்டிவிரதத்தை தொடங்கினர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவிடான பழனி கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று தொடங்கியது. உச்சிகாலபூஜை முடிந்து திருஆவினன்குடி கோவிலில் அருள்மிகு குழந்தை வேலாயுதசாமிக்கு காப்பு கட்டப்பட்டது. அதேநேரத்தில் பழனி மலைக்கோவிலில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மூலவர் மற்றும் உற்சவருக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து விநாயகர், துவாரபாலகர், நவவீரர்கள், மயில், கொடிமரம் ஆகியவற்றிற்கும் காப்பு கட்டப்பட்டது. காப்புகட்டுதலை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களுக்கும் காப்புகட்டிக்கொண்டு சஷ்டி விரதத்தை தொடர்ந்தனர். ஏழு நாட்கள் சஷ்டி விரதம் மேற்கொண்டு, சூரசம்ஹாரம் நடைபெறும் நவம்பர் 2ம்தேதி அன்று தண்டு விரதம் மேற்கொண்டு விரதத்தை நிறைவு செய்வர். நவம்பர் 3ம்தேதி அருள்மிகு சண்முகர்-வள்ளி,தெய்வானைக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவடைகிறது. கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு பழனி கோவில் யானை கஸ்தூரியும் காப்புக்கட்டி சஷ்டிவிரதம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் ஜெயச்சந்திரபானு ரெட்டி, துணைஆணையர் செந்தில்குமார் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.